Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தின் இலங்கையைச் சேர்ந்த உறுப்புரிமை அமைப்புக்களான இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம், இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைக் கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கைக் கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர் கழகம் ஆகியவற்றின் கௌரவ ஏற்பாட்டிலான பூகோள கணக்கியல் தலைவரின் இலங்கை விஜயம்

இலங்கையின் முப்பெரும் தேசிய தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களான இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் (CA Sri Lanka), இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைக் கணக்காளர் நிறுவகம் (CMA Sri Lanka) மற்றும் இலங்கைக் கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர் கழகம் (AAT Sri Lanka) ஆகியவற்றின் ஏற்பாட்டில், கணக்கியல் தொழிலின் பூகோள அமைப்பான சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தின் (IFAC) தலைவரான திருமதி ரச்சேல் க்ரீம்ஸ் அம்மையார் 2018 ஜூலை மாதம் 04 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரையான நான்கு நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்.

அம்மையாரது வருகை இலங்கையின் கணக்கியல் தொழிற்துறையின் பூகோள அங்கீகாரத்தினை ஸ்திரமாக்குவதுடன், நாட்டினுள் கணக்கியல் தொழிற் துறையினை பலப்படுத்துவதற்கான மூன்று தேசிய தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களினாலும் இணைந்து உருவாக்கப்படும் "மேன்மையுடனான தொழிற்துறை ஒன்றின் உருவாக்கம்" என்னும் தந்திரோபாய முன்நகர்வினை உத்வேகப்படுத்துவதாகவும் அமையவுள்ளது.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் (CA Sri Lanka), இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைக் கணக்காளர் நிறுவகம் (CMA Sri Lanka) மற்றும் இலங்கைக் கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர் கழகம் (AAT Sri Lanka) ஆகிய முப்பெரும் தேசிய தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களும் கணக்கியல் தொழிற் துறையினை பலப்படுத்துவதன் மூலம் பொதுநன்மைக்கான சேவையினை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன் தொழிற்பட்டு பலமான சர்வதேச பொருளாதாரங்களுக்கான பங்களிப்பினை நல்கும் கணக்கியல் துறையின் பூகோள அமைப்பான சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தின் உறுப்புரிமை அமைப்புக்களாக உள்ளன. சர்வதேச கணக்காளர் சம்மேளனமானது பொதுப் பயிற்சியளித்தல், கல்வி, அரச சேவை, கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் சேவையாற்றும் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட கணக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 130 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் சட்டப் பிராந்தியங்களைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்ட தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களினை உள்ளடக்கியுள்ளது.

கணக்கியல் தொழிலின் பூகோள அமைப்பான சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தின் (IFAC) தலைவர் திருமதி ரச்சேல் க்ரீம்ஸ்

அம்மையார் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இம் முப்பெரும் தேசிய தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஒன்றுகூடல்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்குபற்றுவார். அத்துடன் அவர் கணக்கியல் தொழிற்துறையின் அங்கத்தவர்கள், ஒழுங்குபடுத்துனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களையும் சந்திப்பார்.

4 ஜூலை 2018 அன்று திருமதி ரச்சேல் க்ரீம்ஸ் அம்மையார் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் (CA Sri Lanka), இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைக் கணக்காளர் நிறுவகம் (CMA Sri Lanka) மற்றும் இலங்கைக் கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர் கழகம் (AAT Sri Lanka) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு இராப்போசனத்தில் கலந்து சிறப்பிப்பார். இந்த இராப்போசனம் உயர்மட்ட அரச அதிகாரிகள், வணிகத்துறை தலைவர்கள், ஒழுங்குபடுத்துனர்கள் மற்றும் கணக்காளர்களின் பங்குபற்றலுடன் சிறப்பிக்கப்படும். அத்துடன், அம்மையார் முப்பெரும் தொழில்சார் கணக்கியல் அமைப்புக்களின் மாணவர்களுடனும் ஒரு கலந்துரையாடலினை மேற்கொள்வார்.

05 ஜூலை 2018 அன்று சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தின் தலைவர் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைக் கணக்காளர் நிறுவகத்தின் பூகோள முகாமைக் கணக்கியல் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வின் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன் இம் மாநாட்டின் தொழிற்திறன் அமர்வுகள் உள்ளடங்கலான பல்வேறு அமர்வுகளிலும் அம்மையார் பங்குபற்றுவார். 05 ஆம் திகதி மாலையில், CMA இன் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருது வழங்கல் - 2018 நிகழ்வின் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையினை ஆற்றுவதுடன், விருதுகளையும் வழங்குவார்.

06 ஜுலை 2018 அன்று திருமதி க்ரீம்ஸ் அம்மையார் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னிலை உயர்மட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்து சிறப்பிக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் காலைப் போசன நிகழ்வில் கலந்து சிறப்பித்து உரையாற்றுவார். அதன் பின் அம்மையார் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் அங்கத்தவர்களுடனான சந்திப்பில் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதுடன், தொழிற்துறை தொடர்பான விடயங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன் அதே நாளில் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் கற்பித்தல் பங்காளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 06 ஆம் திகதி மாலையில், இலங்கைக் கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர் கழகத்தின் புதிய தலைவரது அங்குரார்ப்பண நிகழ்வில் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

07 ஜுலை 2018 அன்று திருமதி கிரீம்ஸ் அம்மையார் நாட்டிலிருந்து விடை பெறுவதற்கு முன்பாக ஏற்பாட்டு அமைப்புக்களான நாட்டின் முப்பெரும் தொழில்சார் கணக்காளர் அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொள்வார்.